பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன்.

0 comments

கடந்த சில நாட்களாக பன்றிக்காய்ச்சல் காற்று மூலம் பரவுவதை விட மீடியா மூலம் தான் பரவுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. இன்றும் நேற்றும் வந்த தலைப்பு செய்திகளை பார்த்தால் திகில் படம் டைட்டில் மாதிரி இருக்கிறது. மக்களின் பயத்தை போக்கவே இந்த பதிவு.



எப்ப இந்த பன்றிக் காய்ச்சல் வந்தது ?

கடந்த மார்ச் மாதம் பன்றிக் காய்ச்சல் நோய் என்று ஒரு புதிய நோய் தோன்றி இருப்பது தெரிய வந்தது.

எங்கிருந்து வந்தது ?

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் உலகின் முதன் முதலாக இந்த நோய் தாக்கியது. முதலில் இதை சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றே நினைத்தனர். பிறகு தான் ரத்தப் பரிசோதனைகள் செய்த போது இது ஏதோ ஒரு புது வைரசின் வேலை என்பதை உணர்ந்தனர்.

பன்றிக்கும் இதற்கு என்ன சம்பந்தம் ?

பன்றிகளின் மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரலை தாக்கும் ஒரு வகை வைரஸ் இது என்று தெரிந்தது. இந்த வைரசால் பாதிக்கப்படும் பன்றியிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த வகை காய்ச்சலுக்கு பன்றிக் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டனர். ஆங்கிலத்தில் இது ஸ்வைன் ப்ளு என்றழைக்கப்படுகிறது.

பன்றி கறி சாப்பிட்டால் வருமா ?

பன்றிக் காய்ச்சல் என்பது நேரடியாக எல்லா பன்றிகளிடம் இருந்து வந்து விடுவதல்ல. பன்றிக் கறி சாப்பிட்டால் இந்த நோய் வந்து விடாது. கொடூர வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பன்றி பக்கத்தில் இருந்தாலோ, அல்லது அந்த வைரஸ் காற்று மூலம் பரவி, நம் உடம்புக்குள் புகுந்தாலோ பன்றிக் காய்ச்சல் வந்து விடும். நேற்றும், இன்றும் வந்த தலைப்பு செய்திகளை பார்த்தால் கூட இந்த காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது.

H1N1 என்றால் என்ன ?

இந்த வைரசின் கொடூரத் தன்மையை முழுமையாக கண்டு பிடித்த பிறகு இந்த வைரஸ்சுக்கு எச்.1 என்.1 என்று பெயரிட்டுள்ளனர். அவ்வளவு தான்.

எனக்கு ஜலதோஷம், காய்ச்சல் வரும் மாதிரி இருக்கிறது, எனக்கு பன்றி காய்ச்சலா ?

ஜலதோஷம், தொண்டை வறட்சி, உடல் வலி, காய்ச்சலுடன் சோர்வு, தலை வலி சிலருக்கு வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி எல்லாம் அறிகுறிகளாகும். அதற்காக காய்ச்சல் ஏற்பட்டதும் ஆ... பன்றிக் காய்ச்சல் என்று பீதி அடைந்து அலற வேண்டியதில்லை.

என்ன செய்ய வேண்டும் ?

முதலில் நீங்கள் வழக்கமாக சிகிச்சை பெறும் குடும்ப டாக்டர்களிடம் உடம்பை காட்டி ஆலோசனை பெறுங்கள். காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் தயங்காமல் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து பார்த்து விடுங்கள்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் யாருக்கோ பன்றி காய்ச்சல் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்ய ?

உங்கள் பகுதியில், ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ள சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சல்- இருமல் இருக்கும் நோயாளிகள் அருகில் செல்லாதீர்கள். தும்மல் போட்டாலோ, இருமினாலோ பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் கொண்டாட்டத்துடன் பரவும். எனவே இருமல் ஆசாமிகள் பக்கத்தில் நிற்காதீர்கள். உங்களுக்கு இருமல் தும்பல் இருந்தால் கையில் ஒரு நல்ல கைகுட்டையை வைத்துக்கொள்ளுங்கள். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல்களை சோப்பை‌க் கொ‌ண்டு கழுவுங்கள்.

பன்றி காய்ச்சல் குணப்படுத்த கூடியதா ?

பன்றிக் காய்ச்சல் என்பது குணப்படுத்தக் கூடிய நோய் உங்களுக்கு தெரிந்த பத்து பேருக்கு இந்த விழிப்புணர்வை பரப்புங்கள். அவர்களையும் பரப்ப சொல்லுங்கள்.

இதுவரை எவ்வளவு பேர் பாதிக்கப்படுள்ளார்கள் ?

10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இன்று உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுடன் உள்ளனர். எனவே பயம் வேண்டாம். இதில் 2 ஆயிரம் பேர் மட்டும் தான் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்குள் பன்றிக் காய்ச்சல் வராது என்று கடந்த ஜூன் மாதம் மார்தட்டி மத்திய அரசு சொன்னது. அப்படி இருக்க இந்தியாவிற்குள் எப்படி வந்தது ?

புனே பள்ளி மாணவர்கள் 11 பேர் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு சுற்றுலா சென்று வந்த போது கையோடு பன்றிக் காய்ச்சலையும் கொண்டு வந்துவிட்டனர்.

யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ?

சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களிடம் மிக, மிக எளிதாக பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிக் கொள்ளும். காற்று மூலம் மிக எளிதாக இந்த வைரஸ் பறக்கும். அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நுரையீரல், ஆஸ்த்மா நோயாளிகள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கொஞ்ச நாளைக்கு குழந்தைகளை முடிந்தவரை சுற்றுலா, மருத்துவமனைகள், ரயில்நிலையம், பஸ்நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.

குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பலாமா ?

சின்ன குழந்தைகள் என்றால் அனுப்பாதீர்கள். கொஞ்ச நாளைக்கு ஹோம் வர்க் செய்யாமல் இருக்கட்டுமே. 8வதுக்கு மேல் அனுப்பலாம். உங்கள் இஷ்டம்.

வேற என்ன செய்ய வேண்டும் ?

நல்லா தூங்க வேண்டும். காற்று வரும் இடத்தில் இருக்க வேண்டும்.
நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும். ஜாலியாக இருக்க வேண்டும்.

டாமிப்ளு மாத்திரை சாப்பிடலாமா ? பக்கவிளைவுகள் இருக்கும் என்று சொல்லுகிறார்களே ?

டாமிப்ளூ மருந்தை நாமாக எடுக்கக்கூடாது. மருத்துவர் சொன்ன பிறகு எடுத்துக்கொள்ளுங்கள். டாமிப்ளு மாத்திரை மட்டும் இல்லை, எல்லா ஆண்டிபயாடிக் மாதிரைகளிலும் பக்கவிளைவுகள் இருக்கிறது என்பது தான் உண்மை.

மீடியாவை பார்த்தால் பயமாக இருக்கிறதே ?

அவர்களுக்கு வேற நியூஸ் இல்லை என்ன செய்ய. இந்தியாவில் 1079 பேர்களில் இதுவரை 15 பேர் இறந்திருக்கிறார்கள். 589 பேர் சரியாகி வீட்டுக்கு வந்துவிட்டார்கள். மற்றவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்கள். கொஞ்ச நாளைக்கு மீடியாவை பார்க்காதீர்கள்/படிக்காதீர்கள். H1N1 சாதாரணமாக மழைகாலத்தில் வரும் ஃபுளுவைவிட மைல்டானது என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

பன்றி காய்ச்சல் வந்தால் மாஸ்க் அனிந்துக்கொள்ள சொல்லுகிறார்கள். மீடியாகாரர்கள் முதலில் மாஸ்க் அணிந்துக்கொள்ள வேண்டும், அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு பேசாமல் இருப்பார்கள்.

அழியப் போகிறதா உலகம்?

0 comments

கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? ஜாதகம், பெயர்ராசி எல்லாம் பார்க்காமல், வத்தலோ தொத்தலோ கிடைத்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.


யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் ஆசைப்படுங்கள். ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாக் மார்க்கெட், பொருளாதார மந்தம், வேலை இழப்பு, இடைத்தேர்தல், மின்னணு இயந்திரம் குளறுபடி, ஜெயலலிதா, கொடைநாடு, கலைஞர் கடிதம், பெட்ரோல் விலை உயர்வு, துவரம்பருப்பு விலை உயர்வு, தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, எண்கவுண்டர், ஈழம், அல்குவைதா, அமெரிக்கா, கியூபா, எதிர்வீட்டு பிகர், பக்கத்து வீட்டு நாய்க்குட்டி, தெருமுனை பிள்ளையார் கோயில், 23சி பஸ், லேடீஸ் காலேஜ், பார்க், பீச், இத்யாதி.. இத்யாதி பிரச்சினைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் எல்லா கருமத்தையும், கந்தாயத்தையும் மறந்துடுங்க. வாழும் காலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளுங்கள்.

ஏனெனில், உங்களுக்கு இன்னமும் இருப்பது இரண்டேகால் வருடம் மட்டுமே. 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது. இப்படித்தான் பீதியைக் கிளப்பி, எல்லோருக்கும் பேதியை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட் சைட்களில்.

மாயா என்றால் நமீதா நடிக்கும் கிளுகிளு படம் மட்டுமல்ல. மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்

மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது.

உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?

எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது.

நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.

2012 டிசம்பர் மாதம் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் முடிவடையும் என்று ஒக்கேனக்கல் செயல்பாட்டு கால அட்டவணைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் முடிவடைந்தாலும் சரி, முடிவடையா விட்டாலும் சரி. ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் குறித்த புலனாய்வுக் கட்டுரை ஒன்றினை 2013 ஜனவரி மாத குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்களும், நானும் படித்துக் கொண்டிருக்கப்போவது மட்டும் உறுதி.

(குமுதம் ரிப்போர்ட்டர், 08-08-2009)

மாமியார் vs மருமகன்'s

0 comments

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

கொடுங்கள்.. பெறுவீர்கள்!....

0 comments

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !